கரூர்: ''சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை தொடர்பான, உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும்'' என, உண்மை கண்டறியும் குழு தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அப்துல் சமது தெரிவித்தார். கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, காளிப்பாளையத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோத கல்குவாரியை எதிர்த்து போராடி வந்த நிலையில் கடந்த, 10ம் தேதி, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அப்துல் சமது தலைமையில், உண்மை கண்டறியும் குழுவினர், ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட இடம், கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு, கரூரில் அப்துல் சமது நிருபர்களிடம் கூறியதாவது:
சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை வழக்கில், உடனடியாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதை வரவேற்கிறோம். மேலும், கொலை வழக்கில் பலருக்கு தொடர்பு இருந்தால், கைது செய்ய வேண்டும். க.பரமத்தி பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. அதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எந்த குவாரிகளிலும் தகவல் பலகை இல்லை. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்மட்ட குழுவை அமைத்து, விசாரித்து, சட்ட விரோதமான கல் குவாரிகளை மூட வேண்டும். மேலும், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும். இதுதொடர்பாக சட்டசபையிலும் பேசுவேன். கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்துக்கு, 50 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். கல் குவாரிகள் உள்ள பகுதிகளில், சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வைத்து, பாறைகளை உடைக்கின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் சொல்லும், விதிமுறைகளுக்கும், கல் குவாரிகளில் நடக்கும் செயல்களுக்கும் முரண்பாடு உள்ளது. இதையெல்லாம், முதல்வர் ஸ்டாலின் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.