People's Watch in Media
‘Most of the rescue efforts for stranded fishermen were done by the community’ The interim report of the people’s inquest carried out by a 15-member team, which included a retired High Court judge, senior journalists and academicians, on...
குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த குழுவின் தலைவராக கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைவராக செயல்படுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல், பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன், ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைய முன்னாள் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு பெண்கள் ஆணைய முன்னாள் தலைவர் ராமாத்தாள், ஓய்வு பெற்ற முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. நாஞ்சில் குமரன், பேராசிரியர் காந்திதாஸ், ஐ.நா. வளர்ச்சித்திட்ட முன்னாள் தலைவர் ஜாண் சாமுவேல் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த உண்மை கண்டறியும் குழுவினர் குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் இந்த குழுவைச் சேர்ந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல், ராமாத்தாள் உள்ளிட்டோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:– குமரி மாவட்டத்தில் நாங்கள் 2 நாட்கள் நடத்திய ஆய்வில் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை முறையாக செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முறையான தகவல் பரிமாற்றம் இருந்திருந்தால் ஏராளமான உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். ‘ஒகி‘ புயல் குறித்து குமரி மாவட்ட மக்களுக்கு முறையான அறிவிப்போ, முன் எச்சரிக்கையோ கொடுக்கவில்லை. முழுக்க, முழுக்க மத்திய– மாநில அரசுகளின் தவறு காரணமாகவே மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளும் சரியாக செய்யப்படவில்லை. காலம் தாழ்ந்து அரசு செயல்பட்டிருக்கிறது. புயலால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற முழுமையான விவரம்கூட அரசிடம் இல்லை. விவசாயிகள், மீனவர்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் கூறுவதுபோல் சேத மதிப்பு அளவிட முடியாததாக இருக்கிறது. மிகப்பெரிய பேரிழப்பை குமரி மாவட்டம் சந்தித்திருக்கிறது. மத்திய அரசு தங்களிடம் உள்ள கப்பல்களையும், விமானங்களையும் உடனடியாக தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தி இருந்தால் காணாமல் போன மீனவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியும். புயல் ஏற்பட்டபோது மாவட்ட நிர்வாகம் செயல் இழந்த நிலையில்தான் இருந்து இருக்கிறது. மீனவர்கள் தரப்பில் இருந்து ஜி.பி.எஸ். கருவி மூலம் 32 இடங்களை அடையாளம் காட்டி அந்த இடங்களில் தேட வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் முறையாக தேடுதல் நடத்தப்படவில்லை. வாழை, ரப்பர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு குறைந்த அளவு இழப்பீடு அறிவிக்கப்பட்டு இருப்பது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பேரிடர் மேலாண்மையில் உறுப்பினர் எண்ணிக்கையை பாதியாக குறைந்தது. இதன் காரணமாகவே முறையாக ஒருங்கிணைப்பு இல்லாமல் மனித உயிர்கள் பலியாகி இருக்கிறது. கடற்படையையும், விமானப்படையையும் தொடர்புகொண்டு கேட்டபோது மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து முறையான தகவல் வந்துசேரவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே சுனாமி மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. இப்போது ஒகி புயல் மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்க வைத்துள்ளது. இனியாவது மத்திய, மாநில அரசுகள் பேரிடர் மேலாண்மை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் 2 நாட்களாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வருகிற 8–ந் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலிலும், மாலை 6 மணிக்கு தூத்தூரிலும் வெளியிடுகிறோம். மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கும் தேதியும், ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்யும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.