for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட  வேண்டும். இது தான் சனநாயக மரபின்  நடைமுறையில் இருக்கும் அரசியல் ஒழுக்க முறைமை, நியதி ஆகும்.

ஆனால் தமிழகத்தில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் இந்த அரசைப் பற்றி எதிர்க்கட்சியும், பாரதிய சனதாவும் தொலைக்காட்சிகளில் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைப்பது, அநாகரிகமாகப் பேசுவது அரசியல் அறமற்ற செயலாகும்.   

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் நூறு நாட்கள், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறவேண்டிய நேரம்.  சனநாயக நெறிமுறைப்படி புதிய அரசு  அமைத்துள்ள “அனைத்துக்கட்சிக் குழுவில்” ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக், கருத்துகளை   எடுத்துரைப்பது தான் அராசியல் நாகரிகம் ஆகும். இதைவிடுத்து பொதுவெளியில் குற்றம் சாட்டுவது வெறுப்பரசியலாகவே வெகுமக்களால் பார்க்கப்படுகிறது.      

குடிமைச்சமூகத்தின் நேர்கொண்ட பார்வை:

ஓர் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, நேர்மையான செயற்பாடுகளைப்  பாராட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும், தார்மீக உரிமையும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு உள்ளது.  குடிமைச்சமூக அமைப்பு என்பதை அரசு சாரா அமைப்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விட வேண்டாம். அவர்கள் மனித  உரிமைகளுக்காக, மீறல்களுக்கெதிராகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகள், குறிப்பாக அரசியல் கட்சிகளைச்  சாராதோர் ஆவர். திமுகவின் வெற்றிக்கு அதன் கட்சியினர் மட்டும் காரணமல்ல. குடிமைச்சமூகத்தினர், எட்டுவழிசசாலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், குடியுரிமைத் திருத்தச்சட்டம்  போன்றவற்றிற்கு எதிராகப் போராடியோர், தொழிற்சங்கத்தினர், பெண்ணுரிமை அமைப்பினர் மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவோர், மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றுவோர், தமிழ்த் தேசிய கருத்துகளை முன் வைத்து பணியாற்றுவோர்,  ஏழு தமிழர் விடுதலைக்குக் குரல் கொடுத்தோர் இவர்கள் அனைவரும்  மனித உரிமைக் காப்பாளர்கள் ஆவர். இவர்கள்  அளித்த வாக்குகளும் சேர்ந்து வெற்றிக்கு வித்திட்டு புதிய அரசைப் பொறுப்பேற்க வைத்துள்ளது என்பதை இங்கே நினைகூர விரும்புகிறோம்.

Full Media Report



Join us for our cause