சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்தது.
இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.
மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அவை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபேன் தெரிவித்தார்.
மேலும் அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என குறிப்பிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையையும், புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.